business

img

தொழில் நிறுவனங்கள் தேச நலனுக்கு எதிராக செயல்படுகின்றன.... டாடா நிறுவனம் மீது திடீர் பாய்ச்சல் காட்டிய பியூஷ் கோயல்...

புதுதில்லி:
டாடா போன்ற இந்திய தொழில் நிறுவனங்கள், நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக ஒன்றிய அரசின் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திடீர் பாய்ச்சல் காட்டியுள்ளார்.இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) ஆண்டு விழாவுக்காக, வீடியோவில் பதிவுசெய்து அனுப்பிவைத்த, தனது வாழ்த்துரையில்தான் கோயல் இவ்வாறு பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இதனை சற்றும் எதிர்பாராத இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பினர், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் பேச்சு அடங்கிய வீடியோவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே தனது யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கி, பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, இந்தியத் தொழில் நிறுவனங்கள் என்று பொத்தாம் பொதுவாகத்தான் பியூஷ் கோயல் விமர்சனம் வைத்தார் என்று கூறப்பட்டாலும், டாடா குழுமத்தைக் குறிவைத்து கோயல் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. 
இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ‘தி இந்து’ ஏடு, அதற்கான வீடியோ பதிப்பின் ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.“நீங்கள் ஒன்றிரண்டு வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கியிருக்கலாம், ஆனால் அவற்றில் தேச நலன் குறைந்து, அந்நிய நிறுவனங்களில் கவனம் செலுத்துவது அதிகரித்துள்ளது, இதை நான் ஏற்கனவே டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரனிடம் தெரிவித்துள்ளேன்.

நாட்டின் வளர்ச்சி குறித்து கவலைப்படாமல் பத்து பைசா லாபம் இருந்தால் கூட போதும் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்கின்றனர், பின்னர் அரசிடம் வந்து அதற்கான வரியில் சலுகை கேட்டு அலைகின்றனர்” என்று பியூஷ் கோயல் பேசியுள்ளார்.இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டாடா குழுமத்தை விமர்சித்து, ஒன்றிய அமைச்சர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கு, இந்திய நாட்டையும், நாட்டு மக்களின் நலன்களையும் காவு கொடுப்பதே மோடி அரசின் முக்கிய கொள்கையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தனது நெருங்கிய நண்பரான கவுதம் அதானியை, கையோடு அழைத்துச் சென்று அவருக்கு ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்கிக் கொடுத்ததை நாடு இன்னும் மறக்கவில்லை. அப்போது, ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கி அதிகாரிகள், ரூ.5 ஆயிரம் கோடியை ஆஸ்திரேலியாவுக்கே சென்று அதானிக்கு கடன் கொடுத்துவிட்டு வந்தார்கள். 

பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்துடனான ரபேல் போர் விமானக் கொள்முதலின்போது, பொதுத்துறை நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தை கழற்றிவிட்டு, அந்த காண்ட்ராக்டை ‘ரிலையன்ஸ் குழுமத்தின்’ அனில் அம்பானிக்கு கொடுத்தவர்தான் பிரதமர் நரேந்திர மோடி. முதலாளிகளுக்காக, இவ்வளவையும் செய்துவிட்டு, திடீரென நாட்டு நலனில் அக்கறை வந்தவர்கள் போல மோடி அரசின் அமைச்சர்கள் நாடகம் போடுகிறார்கள் என்று கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மோடியின் அமைச்சர்கள் அம்பானி, அதானி குறித்து பேசத் தயாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

;